Thursday, October 29, 2009

பீர்பால் கதை!

உங்களுக்கு பீர்பால் கதை தெரியும் தானே...அக்பரின் சபையிலிருந்த பீர்பால் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக மிகப்பிரபலமானவர். எந்த ஒரு பிரச்சினையையும், தன் மதியூகத்தால் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகரில்லை. ஆனால் பீர்பாலின் பின்புலம் என்ன? எப்படி அக்பரை சந்தித்தார்? அரசவையில் உயர்ந்த பதவி பெற்றது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை இதோ...

ஒருநாள் அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் பணிவுடன் வணங்கியபோது, அக்பர்அவனை நோக்கி, "நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!" என்றான் அவன்.

"உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?" என்று அக்பர் கேட்டார்.

"என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்" என்றான் மகேஷ்.

"எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!" என்றார் அக்பர். "பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

"அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!" என்றார் அக்பர். "பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?" என்று மகேஷ் கேட்டான்.

"முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!" என்றார் அக்பர். "நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!" என்றான் மகேஷ். "அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?" என்றார் அக்பர்.

"முப்பது சவுக்கடி கொடுங்கள்!" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். "உனக்கென்ன பைத்தியமா?" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

"அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் "அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!" என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை "நீ அடிக்கத் தொடங்கு!" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் "நிறுத்து!" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, "பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!" என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், "என்ன உளறுகிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, "தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்" என்றான்.

இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டை அடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி "இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், "நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்" என்றார்.

இந்தக் கதையுடன், உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஏராளமான பீர்பால் கதைகள் அம்புலிமாமா இணையதளத்தில்...

Tuesday, October 27, 2009

நான் கடவுள்!

ஜீனியஸ் கோயிந்து, வாண்டு பாபு போன்றவர்களின் கிச்சு கிச்சு கலாட்டாக்கள் அம்புலிமாமா இணையதளத்தில்... குட்ட்ட்டி சாம்பிள் இதோ!


ஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!

நண்பர்: என்ன கோயிந்து சொல்ற?

ஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா 'அடக்கடவுளே! நீ திரும்பவும் வந்துட்டியா'ன்னு எல்லாரும் பயந்து 'ஆள விடுயா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டாங்க.

---------------

ஜீனியஸ் கோயிந்து (மனைவியிடம்) : நேத்து கண்ட கனவு செம காமெடியா இருந்துச்சி தானே...

மனைவி : உங்களுக்கு வந்த கனவு காமெடியா இருந்துச்சின்னு எனக்கு எப்படி தெரியும்?

ஜீனியஸ் : விளையாடாதே.. அந்த கனவுல நீயும் தானே இருந்த?!

----------


மொபைல் போன் கஸ்டமர் கேருக்கு போன் போட்டார் நம்ம ஜீனியஸ்....

கஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்?

ஜீனியஸ் கோயிந்து: ஹல்லோ....இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்!

கஸ்டமர் கேர்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, கரண்ட் பில் ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க!

ஜீனியஸ் (கோபமாக) : லூசு...!!

கஸ்டமர்: என்னாச்சு சார்.. ஏன் திட்றீங்க?

ஜீனியஸ்: உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன்? மொபைல் பில்லு தானே கேட்டேன்... எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்?

கஸ்டமர் கேர்: @#$%$!??


----------

நண்பர் : கோயிந்து.... நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

ஜீனியஸ் கோயிந்து : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.

நண்பர் : அட மக்கு... முதல் இட்லி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ...

(நம்ம ஜீனியஸ் வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜீனியஸ்: நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.

ஜீனியஸ் : அடச்சே... நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன்!

இதுபோன்ற நகைச்சுவை கலாட்டாக்கள் அம்புலிமாமா தளத்தில்.

Thursday, October 22, 2009

மரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சுமந்து செல்கிறான்?

விக்ரமாதித்தன் -வேதாளம் கதையை சிறுவயதில் படிக்காதவர்களை/ கேள்விப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அம்புலிமாமாவில் நீண்ட ஆண்டுகளாக வெளிவரும் இத்தொடர் கதையின் நதிமூலம், அதாவது விக்ரமன் ஏன் மரத்தில் தொங்கும் வேதாளத்தை சுமந்து செல்கிறான் என்பதை அறிய ஆர்வமுள்ளோர்க்காக இந்தப் பதிவு....

கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கடித்தது. அப்போது அதிலிருந்த ரத்தினக் கல் கீழே விழுந்தது.

உடனே விக்ரமன் தன் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, அனைத்து பழங்களையும் சோதித்துப் பார்க்கச் சொன்னான். பழங்களைச் சோதித்த அதிகாரி, "மன்னா, பழங்கள் உலர்ந்து விட்டன. ஆனால் அவற்றில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருந்தன" என்றார். மறுநாள் வழக்கம் போல முனிவர் வந்து விக்ரமனிடம் பழம் கொடுத்தார். அவரிடம், "சுவாமி, தினமும் ஒரு பழத்தில் ரத்தினக் கற்களை வைத்து தருகிறீர்களே... ஏன்? என்று கேட்டான். அதற்கு பதிலளித்த முனிவர், மிகப் பெரிய நன்மையை என் மந்திரத்தால் செய்தாக வேண்டும். இல்லையெனில் பெரும் கேடு ஏற்படும். இச்செயலைச் செய்வதற்கு எனக்கு சுத்தமான வீரன் ஒருவனது துணை வேண்டும். அதற்காகத்தான் உன்னை அணுகினேன்," என்றார்.

தன்னால் மிகப் பெரிய நன்மை நடக்கப்போவதாகக் கூறியதால் மகிழ்ந்த விக்ரமன், இதற்கு ஒப்புக் கொண்டான். "வரப்போகும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று நள்ளிரவில் ஊருக்கு வெளியே இருக்கும் மயானத்துக்கு நி தனியே வரவேண்டும்," என்றார் முனிவர். சொன்ன நேரத்தில் மயானத்துக்குச் சென்றான் விக்ரமன். அவனுக்காக அங்கு காத்திருந்த முனிவர், "இங்கிருந்து தென் திசையில் சென்றால், அங்கு ஒற்றை மரம் இருக்கும். அதில் ஓர் ஆணின் உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அதை எடுத்துக் கொண்டு இங்கே வா. நடுவில் ஏதும் பேசக் கூடாது" என்றார்.

மன்னனுன் அவர் கூறிய திசையை நோக்கி நடந்தான். அங்கு ஓர் ஒற்றை மாத்தில் ஆணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் ஏறி கயிற்றை அறுத்து, பிண நாற்றம் அடிக்கும் அந்த உடலை கீழே தள்ளினான். கீழே விழுந்த அந்த உடல் அழுதது. அந்த உடலில் உயிர் இருப்பதாக நம்பிய விக்ரமன், அதைத் தூக்க முயற்சித்தான். உடனே உடல் சிரிக்க ஆரம்பித்தது. "ஏன் இப்படிச் சிரிக்கிறாய்" என மன்னன் கேட்ட அடுத்த நொடி மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது அந்த உடல். அது வேதாளம் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரமன், மீண்டும் அதை கிழே கொண்டு வந்து முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. "மன்னா, நாம் நடக்கும் போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்" என ஆரம்பித்தது. கதையின் முடிவைப் பற்றி புதிர் போட்டது. அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்ரமனை மிரட்டியது.

வேறு வழியில்லாமல் விக்ரமனும் பதில் கூறினான். பதில் கூறியதால் அவனது மவுனம் கலைந்த அடுத்த நொடி, வேதாளம் மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது. இப்படியே, ஒவ்வொரு கதையாகச் சொல்லி அவனிடம் கேள்விகள் கேட்கும். பதில் சொல்வதற்காக அவன் வாய் திறந்து பேசியதும் மரத்தில் ஏறிக் கொள்ளும். இது தான் விக்ரமன் - வேதாளத்தின் கதை!!

வேதாளம் சொல்லிய அத்தனை கதைகளும், அழகிய படங்களுடன் அம்புலிமாமா இணையதளத்தில்!!

Wednesday, October 21, 2009

ஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்!

விந்தையான + வித்தியாசமான செய்திகள் யாவும் அம்புலிமாமா தளத்தில்... சின்ன சாம்பிள் இதோ!

பேய்ப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை மட்டும் தான் மிரட்டி டென்ஷனாக்கும்...ஆனால் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் பேய்ப்படங்களில் வரும் பேய்களால், அந்நாட்டு அரசே மிரண்டு போய் டென்ஷனாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக பேய்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள அழகிய தீவுகளுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பேய்கள் துரத்துவது போலவும், அங்குள்ள இயற்கையே பேய்களாக மாறி தாக்குவது போலவும் படங்களில் சித்தரிக்கப்பட்டன.

துவக்கத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்நாட்டு அரசு, இப்போது கலங்கிப்போய உள்ளது. காரணம், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை சார்பில் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டனர்.

இறுதியில், அந்நாட்டு சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு, அங்கு வெளியாகும் பேய்ப் படங்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள இயற்கை அழகையும், மனிதர்களையும் பேய்களாக சித்தரித்து, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது போல தொடர்ந்து திரைப்படங்கள் காண்பிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளை மர்மப் பிரதேசங்களாக சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அச்சம் கொள்ள வைத்து வருவாயைக் கெடுக்கும் பேய்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை என்ன செய்யலாம் என்று தற்போது அந்நாட்டு யோசித்து வருகிறது.

மேலும் பல சுவையான, வியப்பில் ஆழ்த்தும் தகவல்களுக்கு... அம்புலிமாமா செல்லவும்
புகைப்படம்: நன்றி Two Barking Dogs

Tuesday, October 13, 2009

1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்கள்?

இப்போதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது தீபாவளி எப்படியிருந்திருக்கும்? 1950ம் ஆண்டுகளில்? 1960ம் ஆண்டுகளில்...? இந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, அந்தந்த ஆண்டுகளில் வெளியான அம்புலிமாமாவின் தீபாவளி மலர் அட்டைப் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...

இது அம்புலிமாமாவின் முதல் தீபாவளி மலர்....1947ம் ஆண்டு!

இது 1948ம் ஆண்டு தீபாவளி...



1950ம் ஆண்டுகள்...














அம்புலிமாமாவின் அனைத்து பழைய இதழ்களையும் பார்க்க,படிக்க இங்கு செல்லவும்!



தமிலிஷ், நியூஸ்பானை பட்டைகளில் ஓட்டுப் போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்!

Monday, October 12, 2009

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

அம்புலிமாமா வலைத்தளத்தின் சுவாரஸியமான பகுதிகளில் இருந்து ஒரு சாம்பிள்...

"என்னைப் பார்..யோகம் வரும்", "கண்ணைப் பார் சிரி" இது போன்ற வாசகங்களைக் கொண்ட திர்ஷ்டிப் படங்கள் எல்லாம் பழைய ஸ்டைல். மீனுக்கு பச்சை குத்தி வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது தான் தற்போதைய திருஷ்டி ஸ்டைல்!

மூட நம்பிக்கைகளை ஹைடெக்காக பின்பற்றுவதில் சீனர்களுக்கு நிகர் யாருமில்லை. வீட்டில் வாஸ்து மீன்களை வளர்த்தால் கோடீஸ்வரர்களாகலாம் என்பதை உலகுக்கு சொல்லித்தந்த சீனாவில், மீன்களை வைத்து அதிரடியாக புதிய மூடப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். செங்க்டு என்ற பகுதியில் உள்ள மிகப் பெரிய வளர்ப்பு விலங்குகள் சந்தையில், கிளி மூக்கு மீன் என்றழைக்கப்படும் வாஸ்து மீன்களின் உடலில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல பல வண்ணங்களில் பச்சை குத்தித் தருகின்றனர்.

தொழில் செய்யும் வாடிக்கையாளர் எனில் "முதலாளி.. உங்க வியாபாரம் இனிமேல் சூப்பர்" என்பது போன்ற வாசகங்களை சீன மொழியில் பச்சை குத்தித் தருகின்றனர். வீடுகள் என்றால், சில சின்னங்கள், வீட்டிலிருப்போரின் ராசியான எண்களை பச்சை குத்தித் தருகின்றனர்.

இந்த மீன்களை வாங்கிச் சென்று வளர்த்தால், வளம் பெருகுவதாக செய்திகள் உலவுவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த மீன்களை வாங்கிச் செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர்.

"சீன்ன மீன் என்பதால் தானே பச்சை குத்தி அதை இம்சை செய்றாங்க...சுறாவும் மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்" என உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது போன்ற விசித்திரமான, விந்தையான செய்திகள் www.ambulimama.com தளத்தில் காணலாம்!

தமிலிஷ் பட்டையில் ஓட்டு போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்!

Thursday, October 8, 2009

பபுள்கம் மென்றால் கண்ணீர் வராது!

"அப்படியா...நம்பமுடியவில்லையே" என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள். அறிவியல், வரலாறு, விலங்குகள் உள்பட பல பிரிவுகளில் ஏராளமான தகவல் துளிகள் அனைத்தும் அம்புலிமாமா இணையதளத்தில் ... சில சாம்பிள்கள் மட்டும் இங்கே!!

சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.

மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது.

கை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்

மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்

மனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப் பயன்படுத்துகின்றனர்.

நெருப்புக் கோழியின் சிறுகுடல் அளவு என்ன தெரியுமா...46 அடி!

வெங்காயம் நறுக்கும் போது சுவிங் கம் அல்லது பபுள்கம் மென்றால் கண்ணீர் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் இறந்ததும், அவரது உடல் அடக்கம் செய்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து தோலைபேசி இணைப்புகளும் 1 நிமிடத்துக்கு துண்டிக்கப்பட்டன.

நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.

கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.

அளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்ட பின், நமது கேட்கும் திறன் கண்டிப்பாக குறையும்.

உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் கிரிஸ்டியன் பெர்னார்ட். 1967ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி பிழைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த 18 நாட்களுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருந்தார்.

மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது ஒரு பல் டாக்டர்!

இது போன்ற அரிய தகவல் துளிகளை http://www.ambulimama.comசென்று பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளலாம்.


தமிலிஷ் பட்டையில் ஓட்டு போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி, அனைவரும் பயனடைய உதவுங்கள்!

Tuesday, October 6, 2009

பிரபல எழுத்தாளராவது எப்படி?

நகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தென்கச்சி சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தனது நகைச்சுவை படைப்புக்களை அம்புலிமாமா இணையதளத்தில் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொக்கிஷத்திலிருந்து மிகச்சிறிய குண்டுமணி இதோ...



"சார் என்ன யோசிக்கிறீங்க"

"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்"

"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை!"

"எனக்கு இப்படி ஒரு விசிறியா? ரொம்ப மகிழ்ச்சி.நீங்க என்னை புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு"

"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க! அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும் முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம் கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பகத்து முதலாளி கையில் கிடைச்சது.

அந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது சார்"

"அவர் யாரு?"

"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்!"

"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்."

"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்!"

"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க?"

"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை!"


இது தென்கச்சியாரின் நகைச்சுவை வெள்ளத்தில் ஒரு துளி தான். வெள்ளத்தில் நீந்தி சிரிப்பில் திக்குமுக்காட...
அம்புலிமாமா இணையதளம் செல்லுங்கள்.