Tuesday, October 6, 2009

பிரபல எழுத்தாளராவது எப்படி?

நகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தென்கச்சி சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தனது நகைச்சுவை படைப்புக்களை அம்புலிமாமா இணையதளத்தில் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொக்கிஷத்திலிருந்து மிகச்சிறிய குண்டுமணி இதோ...



"சார் என்ன யோசிக்கிறீங்க"

"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்"

"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை!"

"எனக்கு இப்படி ஒரு விசிறியா? ரொம்ப மகிழ்ச்சி.நீங்க என்னை புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு"

"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க! அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும் முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம் கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பகத்து முதலாளி கையில் கிடைச்சது.

அந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது சார்"

"அவர் யாரு?"

"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்!"

"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்."

"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்!"

"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க?"

"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை!"


இது தென்கச்சியாரின் நகைச்சுவை வெள்ளத்தில் ஒரு துளி தான். வெள்ளத்தில் நீந்தி சிரிப்பில் திக்குமுக்காட...
அம்புலிமாமா இணையதளம் செல்லுங்கள்.

1 comment:

Anonymous said...

அருமையான நகைச்சுவை குட்டிக் கதை

Post a Comment