Tuesday, November 10, 2009

புலியைக் கொன்ற அதிசய பசுக்கள்!

சுவாரஸியமான நாட்டுப்புறக் கதைகள் அம்புலிமாமாவில் ஏராளம். அவற்றுள் ஒரு துளி இதோ...

முத்து ஒரு அநாதை வாலிபன். மாடு மேய்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த தொழில். நான்கு பசுமாடுகளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குக் கிடையாது. தினமும் தன் கிராமத்தின் எல்லையில்இருந்த காட்டிற்குத் தன் மாடுகளை அழைத்துச் சென்றபின், அவற்றை மேய விட்டு விட்டு, முத்து ஒரு மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதிக் கொண்டே பொழுது போக்குவான்.

ஒருநாள் முத்து அவ்வாறு குழல் ஊதிக் கொண்டிருக்கையில்,திடீரென ஒரு புலியின் உறுமல் சத்தம் கேட்டது. தன் மாடுகளைப் புலி கொன்று விடுமே என்று பதறிக் கொண்டே எழுந்த போது, அவன் கண்களில் ஓர் அதிசயக் காட்சி தென்பட்டது. புலியைக் கண்டு பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், அவனுடைய நான்கு மாடுகளும் புலியைச் சூழ்ந்து கொண்டு அதைத் தன் கொம்புகளால் தாக்கின. வாழ்வில் முதன்முறையாக தன்னைப் பசுமாடுகள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியுற்ற புலி தப்பித்து ஓட முயற்சித்தது. ஆனால் மாடுகள் அதைத் தப்பிக்க விடாமல் தன் கொம்புகளால் குத்திக் கிழித்துக் கொன்று விட்டன.

அன்று முதல், தன் மாடுகளின் மீது முத்துவிற்குப் பெருமதிப்பு ஏற்பட்டு விட்டது. அவற்றைப் பொக்கிஷம்போல், பத்திரமாகப் பாதுகாத்தான். அந்த ஆண்டு வானம் பொய்த்ததால், அவனுடைய மாடுகளுக்கு சரியானபடி தீவனம் கிடைக்கவில்லை. தன்னுடைய மாடுகள் அரை வயிற்றுக்கு உண்டு பட்டினி கிடப்பதைக் காண சகிக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தை விட்டுத் தன் பசுக்களுடன் வெகுதூரம் சென்று ஒரு மலைப்பிரதேசத்தை அடைந்தான். குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் புல் செழிப்பாக வளர்ந்திருந்தும், அவற்றை மேய மாடுகளே தென்படவில்லையென்பதைக் கண்டு முத்து வியப்படைந்தான். அப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தை அடைந்து அங்கு தன் குடிசையை அமைத்துக் கொண்டான்.

அந்தக் கிராமத்திலுள்ள ஏராளமான கால்நடைகள் எலும்பும், தோலுமாய் காணப்பட்டன. அருகிலேயே, குன்றுகளுக்கிடையே செழிப்பான புல்வெளி இருந்தும், கிராமத்தினர் தங்கள் மாடுகளை மேய்க்க அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. உடனே அவன் கிராமத்து மக்களிடம் அதற்கான காரணத்தை கேட்க, அவர்கள், "குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் பல புலிகளும், சிங்கங்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டன. அங்கு மேயச் செல்லும் எங்கள் மாடுகள் காணாமற் போய் விட்டன. புலிகளும், சிங்கங்களும் எங்கள் மாடுகளை அடித்துத் தின்றுவிடுவதால், அங்கு நாங்கள் மாடுகளை அனுப்புவதே இல்லை. எல்லா மாடுகளும் கிராமத்திலேயே மேய்வதால், நாளடைவில் இங்கு புல் குறைந்து விட்டது. அதனால்தான் எங்களுடைய மாடுகள் வற்றிப் போய் காணப்படுகின்றன" என்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், அந்தக் குன்றுப் பிரதேசத்தில் கஜராஜன் என்ற திருடன் வசித்து வந்தான். அங்கு மேய வரும் பசுக்களைக் கண்டதும் அவற்றைத் திருடுவதற்கு ஒரு யோசனையைக் கையாண்டான். அதன்படி புதரில் மறைந்து கொண்டு, புலியைப் போலவோ, அல்லது சிங்கத்தைப் போலவோ ஒலி எழுப்புவான். மாடு மேய்ப்பவர்கள் அதைக்கேட்டு ஓடி விடுவார்கள். பிறகு பயந்து போனப் பசுக்களும் அப்பகுதியை விட்டு ஓடிச் சென்று, எதிர் திசையை அடையும். பிறகு, வழிதவறிப்போன பசுக்களை அவன் அழைத்துச் சென்று வேறு கிராமங்களில் விற்று விடுவான். இப்படியே சில ஆண்டுகளில் அவன் நிறையப் பணம் சம்பாதித்து விட்டான்.

இவ்வாறு ஏகப்பட்ட மாடுகளைத் திருடி விற்றுவிட்ட கஜராஜனுக்கு சில மாதங்களாக திருடுவதற்கு மாடுகளே கிடைக்கவில்லை. ஒருநாள் நான்கு கொழுத்த மாடுகளை அங்கே கண்டதும் அவனுக்குப் பயங்கர மகிழ்ச்சி உண்டாகியது. கூடவே, மாடுகளை மேய்க்க வந்த முத்துவையும் பார்த்தான். விஷயம் தெரியாத புதிய ஆள் ஒருவன் மாடுகளை மேய்க்க வந்திருக்கிறான் என்று கஜராஜன் புரிந்து கொண்டான். அந்த மாடுகள் நான்கையும் கடத்தித் திருடத் தீர்மானித்து, ஒரு புதரினுள் பதுங்கிக் கொண்டான். முத்து தன் மாடுகளை கவனிக்காமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து குழல் ஊதத் தொடங்கியது அவனுக்கு வசதியாகப் போயிற்று.

புதரில் பதுங்கிய கஜராஜன் புலியைப் போல் உறுமினான். அவன் எதிர் பார்த்ததுபோல் மாடுகள் பயந்து ஓடவில்லை. அவன் பதுங்கியிருந்த புதரை சூழ்ந்து கொண்டு, புலி வெளியே வந்தால் தாக்கத் தயாராயின. புலியின் உறுமலைக் கேட்ட முத்து, தன் மாடுகள் புதரைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தயாராயிருப்பதைக் கண்டு வேடிக்கை பார்க்க எழுந்து நின்றான்.

முதன் முறையாக தன் சூழ்ச்சி பலிக்கவில்லை என்று அறிந்த கஜராஜன் உடனே சிங்கத்தைப் போல் கர்ஜித்தான். என்ன ஆச்சரியம்? அந்த மாடுகள் அப்போதும் பயப்படாமல் புதரைச் சுற்றி நின்றன. தங்கள் கொம்புகளை ஆக்ரோஷத்துடன் ஆட்டிக் கொண்டே சீறின. கஜராஜன் நடுநடுங்கிப் போனான். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மாடுகளைக் கடத்தித் திருடும் எண்ணத்தை விட்டு, தான் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்தான். எப்படியாவது முயற்சி செய்து மாடுகளை பயமுறுத்த எண்ணி, புலியின் குரலிலும், சிங்கத்தின் குரலிலும் மாறி மாறி ஒலிஎழுப்பினான். ஆனால் அந்த மாடுகள் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் கஜராஜனின் உரத்த கர்ஜனையைக் கேட்டு கிராமத்திலிருந்த ஆடு, மாடுகள் பயத்தில் சிதறி ஓடலாயின.

அதற்குள், முத்து கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் "என் மாடுகள் புலியையும், சிங்கத்தையும் புதருக்குள் முற்றுகையிட்டு விட்டன. இன்னும் சற்று நேரத்தில் அவை புதரில் புகுந்து அவற்றை கொம்புகளினால் குத்திக் கிளறும் காட்சியைப் பார்க்க வாருங்கள்" என்று கூவி அழைத்தான். ஆனால் பலரும் அவன் சொல்வதை நம்பவில்லை. தைரியமுள்ள சிலர் மட்டுமே அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தனர்.

அங்கு அவர்கள் ஒரு புதரைச் சுற்றி முத்துவின் மாடுகள் முற்றுகையிட்டுச் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். "முத்து, புலியும் சிங்கமும் எங்கே?" என்று அவர்கள் கேட்டனர். "என் மாடுகளுக்குப் பயந்து அவை புதரினுள் பதுங்கியுள்ளன. அவற்றை வெளியே வரச் செய்தால் போதும்! அப்புறம் பாருங்கள் நடப்பதை!" என்றான் முத்து.

உடனே அங்கு இருந்தவர்கள் கற்களைப் பொறுக்கிப் புதருக்குள் வீசினர். கல்லடி தாங்க முடியாத கஜராஜன் வெளியே வர, அவன் மீது மாடுகள் பாய்ந்து கொம்புகளால் குத்திப் புரட்டிப் போட்டு விட்டன. குற்றுயிரும், கொலையுயிருமாய் வெளியே வந்த கஜராஜனைக் கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

அனைவர் முன்னிலையிலும் கஜராஜன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். கிராமத்தினரின் கோபம் எல்லைமீறி, கஜராஜனை அடித்துத் துவைத்தனர். அன்றுமுதல், முத்து அந்த கிராமத்திற்குத் தலைவன் ஆகிவிட்டான். கிராமத்தினரும் பயமின்றி தங்கள் கால்நடைகளை அங்கு மேய்க்க அனுப்பினர்.

Friday, November 6, 2009

வயித்துல குதிரை!

கிச்சு கிச்சு மூட்டும் இந்தக் குட்டிக் கதையை மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் ஸ்டைலில் படித்து ரசியுங்கள்!

இந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான். அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.

"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"

"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"

"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."

"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"

"சரி எதனால வலி?"

"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"

"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"

உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்.

அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"

"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"

"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"

"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"

"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"

அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

"பளார்!!"

எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.

"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"

டாக்டர் மயங்கி விழுந்தார்.

இது போன்ற அவரது அனைத்து நகைச்சுவை கதைகளும் அம்புலிமாமா இணையதளத்தில்!!

Thursday, October 29, 2009

பீர்பால் கதை!

உங்களுக்கு பீர்பால் கதை தெரியும் தானே...அக்பரின் சபையிலிருந்த பீர்பால் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக மிகப்பிரபலமானவர். எந்த ஒரு பிரச்சினையையும், தன் மதியூகத்தால் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகரில்லை. ஆனால் பீர்பாலின் பின்புலம் என்ன? எப்படி அக்பரை சந்தித்தார்? அரசவையில் உயர்ந்த பதவி பெற்றது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை இதோ...

ஒருநாள் அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் பணிவுடன் வணங்கியபோது, அக்பர்அவனை நோக்கி, "நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!" என்றான் அவன்.

"உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?" என்று அக்பர் கேட்டார்.

"என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்" என்றான் மகேஷ்.

"எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!" என்றார் அக்பர். "பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

"அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!" என்றார் அக்பர். "பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?" என்று மகேஷ் கேட்டான்.

"முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!" என்றார் அக்பர். "நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!" என்றான் மகேஷ். "அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?" என்றார் அக்பர்.

"முப்பது சவுக்கடி கொடுங்கள்!" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். "உனக்கென்ன பைத்தியமா?" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

"அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் "அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!" என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை "நீ அடிக்கத் தொடங்கு!" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் "நிறுத்து!" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, "பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!" என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், "என்ன உளறுகிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, "தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்" என்றான்.

இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டை அடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி "இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், "நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்" என்றார்.

இந்தக் கதையுடன், உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஏராளமான பீர்பால் கதைகள் அம்புலிமாமா இணையதளத்தில்...

Tuesday, October 27, 2009

நான் கடவுள்!

ஜீனியஸ் கோயிந்து, வாண்டு பாபு போன்றவர்களின் கிச்சு கிச்சு கலாட்டாக்கள் அம்புலிமாமா இணையதளத்தில்... குட்ட்ட்டி சாம்பிள் இதோ!


ஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!

நண்பர்: என்ன கோயிந்து சொல்ற?

ஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா 'அடக்கடவுளே! நீ திரும்பவும் வந்துட்டியா'ன்னு எல்லாரும் பயந்து 'ஆள விடுயா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டாங்க.

---------------

ஜீனியஸ் கோயிந்து (மனைவியிடம்) : நேத்து கண்ட கனவு செம காமெடியா இருந்துச்சி தானே...

மனைவி : உங்களுக்கு வந்த கனவு காமெடியா இருந்துச்சின்னு எனக்கு எப்படி தெரியும்?

ஜீனியஸ் : விளையாடாதே.. அந்த கனவுல நீயும் தானே இருந்த?!

----------


மொபைல் போன் கஸ்டமர் கேருக்கு போன் போட்டார் நம்ம ஜீனியஸ்....

கஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்?

ஜீனியஸ் கோயிந்து: ஹல்லோ....இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்!

கஸ்டமர் கேர்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, கரண்ட் பில் ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க!

ஜீனியஸ் (கோபமாக) : லூசு...!!

கஸ்டமர்: என்னாச்சு சார்.. ஏன் திட்றீங்க?

ஜீனியஸ்: உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன்? மொபைல் பில்லு தானே கேட்டேன்... எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்?

கஸ்டமர் கேர்: @#$%$!??


----------

நண்பர் : கோயிந்து.... நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

ஜீனியஸ் கோயிந்து : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.

நண்பர் : அட மக்கு... முதல் இட்லி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ...

(நம்ம ஜீனியஸ் வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜீனியஸ்: நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.

ஜீனியஸ் : அடச்சே... நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன்!

இதுபோன்ற நகைச்சுவை கலாட்டாக்கள் அம்புலிமாமா தளத்தில்.

Thursday, October 22, 2009

மரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சுமந்து செல்கிறான்?

விக்ரமாதித்தன் -வேதாளம் கதையை சிறுவயதில் படிக்காதவர்களை/ கேள்விப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அம்புலிமாமாவில் நீண்ட ஆண்டுகளாக வெளிவரும் இத்தொடர் கதையின் நதிமூலம், அதாவது விக்ரமன் ஏன் மரத்தில் தொங்கும் வேதாளத்தை சுமந்து செல்கிறான் என்பதை அறிய ஆர்வமுள்ளோர்க்காக இந்தப் பதிவு....

கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கடித்தது. அப்போது அதிலிருந்த ரத்தினக் கல் கீழே விழுந்தது.

உடனே விக்ரமன் தன் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, அனைத்து பழங்களையும் சோதித்துப் பார்க்கச் சொன்னான். பழங்களைச் சோதித்த அதிகாரி, "மன்னா, பழங்கள் உலர்ந்து விட்டன. ஆனால் அவற்றில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருந்தன" என்றார். மறுநாள் வழக்கம் போல முனிவர் வந்து விக்ரமனிடம் பழம் கொடுத்தார். அவரிடம், "சுவாமி, தினமும் ஒரு பழத்தில் ரத்தினக் கற்களை வைத்து தருகிறீர்களே... ஏன்? என்று கேட்டான். அதற்கு பதிலளித்த முனிவர், மிகப் பெரிய நன்மையை என் மந்திரத்தால் செய்தாக வேண்டும். இல்லையெனில் பெரும் கேடு ஏற்படும். இச்செயலைச் செய்வதற்கு எனக்கு சுத்தமான வீரன் ஒருவனது துணை வேண்டும். அதற்காகத்தான் உன்னை அணுகினேன்," என்றார்.

தன்னால் மிகப் பெரிய நன்மை நடக்கப்போவதாகக் கூறியதால் மகிழ்ந்த விக்ரமன், இதற்கு ஒப்புக் கொண்டான். "வரப்போகும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று நள்ளிரவில் ஊருக்கு வெளியே இருக்கும் மயானத்துக்கு நி தனியே வரவேண்டும்," என்றார் முனிவர். சொன்ன நேரத்தில் மயானத்துக்குச் சென்றான் விக்ரமன். அவனுக்காக அங்கு காத்திருந்த முனிவர், "இங்கிருந்து தென் திசையில் சென்றால், அங்கு ஒற்றை மரம் இருக்கும். அதில் ஓர் ஆணின் உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அதை எடுத்துக் கொண்டு இங்கே வா. நடுவில் ஏதும் பேசக் கூடாது" என்றார்.

மன்னனுன் அவர் கூறிய திசையை நோக்கி நடந்தான். அங்கு ஓர் ஒற்றை மாத்தில் ஆணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் ஏறி கயிற்றை அறுத்து, பிண நாற்றம் அடிக்கும் அந்த உடலை கீழே தள்ளினான். கீழே விழுந்த அந்த உடல் அழுதது. அந்த உடலில் உயிர் இருப்பதாக நம்பிய விக்ரமன், அதைத் தூக்க முயற்சித்தான். உடனே உடல் சிரிக்க ஆரம்பித்தது. "ஏன் இப்படிச் சிரிக்கிறாய்" என மன்னன் கேட்ட அடுத்த நொடி மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது அந்த உடல். அது வேதாளம் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரமன், மீண்டும் அதை கிழே கொண்டு வந்து முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. "மன்னா, நாம் நடக்கும் போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்" என ஆரம்பித்தது. கதையின் முடிவைப் பற்றி புதிர் போட்டது. அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்ரமனை மிரட்டியது.

வேறு வழியில்லாமல் விக்ரமனும் பதில் கூறினான். பதில் கூறியதால் அவனது மவுனம் கலைந்த அடுத்த நொடி, வேதாளம் மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது. இப்படியே, ஒவ்வொரு கதையாகச் சொல்லி அவனிடம் கேள்விகள் கேட்கும். பதில் சொல்வதற்காக அவன் வாய் திறந்து பேசியதும் மரத்தில் ஏறிக் கொள்ளும். இது தான் விக்ரமன் - வேதாளத்தின் கதை!!

வேதாளம் சொல்லிய அத்தனை கதைகளும், அழகிய படங்களுடன் அம்புலிமாமா இணையதளத்தில்!!

Wednesday, October 21, 2009

ஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்!

விந்தையான + வித்தியாசமான செய்திகள் யாவும் அம்புலிமாமா தளத்தில்... சின்ன சாம்பிள் இதோ!

பேய்ப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை மட்டும் தான் மிரட்டி டென்ஷனாக்கும்...ஆனால் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் பேய்ப்படங்களில் வரும் பேய்களால், அந்நாட்டு அரசே மிரண்டு போய் டென்ஷனாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக பேய்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள அழகிய தீவுகளுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பேய்கள் துரத்துவது போலவும், அங்குள்ள இயற்கையே பேய்களாக மாறி தாக்குவது போலவும் படங்களில் சித்தரிக்கப்பட்டன.

துவக்கத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்நாட்டு அரசு, இப்போது கலங்கிப்போய உள்ளது. காரணம், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை சார்பில் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டனர்.

இறுதியில், அந்நாட்டு சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு, அங்கு வெளியாகும் பேய்ப் படங்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள இயற்கை அழகையும், மனிதர்களையும் பேய்களாக சித்தரித்து, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது போல தொடர்ந்து திரைப்படங்கள் காண்பிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளை மர்மப் பிரதேசங்களாக சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அச்சம் கொள்ள வைத்து வருவாயைக் கெடுக்கும் பேய்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை என்ன செய்யலாம் என்று தற்போது அந்நாட்டு யோசித்து வருகிறது.

மேலும் பல சுவையான, வியப்பில் ஆழ்த்தும் தகவல்களுக்கு... அம்புலிமாமா செல்லவும்
புகைப்படம்: நன்றி Two Barking Dogs

Tuesday, October 13, 2009

1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்கள்?

இப்போதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது தீபாவளி எப்படியிருந்திருக்கும்? 1950ம் ஆண்டுகளில்? 1960ம் ஆண்டுகளில்...? இந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, அந்தந்த ஆண்டுகளில் வெளியான அம்புலிமாமாவின் தீபாவளி மலர் அட்டைப் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...

இது அம்புலிமாமாவின் முதல் தீபாவளி மலர்....1947ம் ஆண்டு!

இது 1948ம் ஆண்டு தீபாவளி...



1950ம் ஆண்டுகள்...














அம்புலிமாமாவின் அனைத்து பழைய இதழ்களையும் பார்க்க,படிக்க இங்கு செல்லவும்!



தமிலிஷ், நியூஸ்பானை பட்டைகளில் ஓட்டுப் போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்!